நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:44 PM GMT (Updated: 8 July 2018 11:44 PM GMT)

நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


பவானிசாகர்,

தென்இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சேறும், சகதியும் 15 அடி போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது.


பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 895 கன அடிநீர் வந்துகொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 77.94 அடியாக இருந்தது. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 327 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 78.45 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், வாய்க்காலுக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story