தொழில்நெறி-திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


தொழில்நெறி-திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 July 2018 4:00 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த தொழில்நெறி-திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் நேற்று முதல் வருகிற 13-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. திறன் வாரத்தின் முதல் நாள் நிகழ்ச்சியான தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று அரியலூரில் நடந்தது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 350-க்கும் மேற்பட்ட அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலமானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக சென்று, அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் முடிவடைந்தது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அதிகாரி வினோத்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கற்பகம் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அதிகாரி முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துறைமங்கலம் நேஷனல் தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு “வேலையை தேடாதே வேலையை உருவாக்கு, திறன் பயிற்சி பெறுவீர் பணிவாய்ப்பை பெற்றிடுவீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் நகரை வலம் வந்தனர்.

இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் வழங்கிச் சென்றனர். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (பொறுப்பு) பரமேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூரில் மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னுரிமையுடையோருக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story