ஈரோடு வெண்டிபாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது


ஈரோடு வெண்டிபாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது
x
தினத்தந்தி 10 July 2018 12:00 AM GMT (Updated: 9 July 2018 10:21 PM GMT)

கடை திறக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு, 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

பெருந்துறை அருகே துடுப்பதி டி.ஓலப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

துடுப்பதி பாலக்கரை கிராமத்தில் 5.84 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 250 கிணறுகள் மூலமாக 6 கிராம விவசாயிகள் மறைமுக பாசனம் பெற்று பயன்அடைகிறார்கள். கடந்த 45 ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும், குளத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு வெண்டிபாளையம் மணலிகந்தசாமி தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு முறை டாஸ்மாக் கடை திறக்க முயன்றபோது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனவே மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடை திறக்கப்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும். எனவே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.”, என்று கூறப்பட்டு இருந்தது.

கொடுமுடி அருகே கொல்லன்கோவில் ஆதிதிராவிடர்காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், “எங்கள் பகுதியில் பொதுக்கிணறு அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கொல்லங்கோவில் பேரூராட்சி சார்பில் குப்பைக்கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக் கப்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஊருக்கு ஒதுக்குபுறமாக குப்பைக்கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.

வேலை நிறுத்த போராட்டம்

ஈரோடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மகளிர் மன்றம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “ஈரோடு தெப்பக்குளம் வீதியில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மகளிர் மன்றம் உள்ளது. அங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தி வருகிறோம். இந்தநிலையில் எங்களது மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வைக்கப்பட்டு உள்ள பலகையில், கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று எழுதி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.

கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம் கொடுத்த மனுவில், “ஈரோடு மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களின் 7-வது ஊதியக்குழு உயர்வு, நிலுவை ஊதியம் கடந்த 9 மாதங்களாக வழங்கப்படவில்லை. இந்த தொகையை வழங்க வேண்டும். இல்லையென்றால் 10-ந் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்”, என்று கூறிஇருந்தார்

அன்னை சத்யாநகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு அன்னை சத்யாநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 1988-ம் ஆண்டு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த வீடுகள் பழுதடைந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்து மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டன. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டால் ஏற்கனவே குடியிருந்த பயனாளிகளுக்கு அதே முகவரியில் வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இந்தநிலையில் புதிதாக கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே குலுக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில், “தனியார் பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பும் காற்று ஒலிப்பான்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 249 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதில் 3 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story