பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மனைவி சித்ரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசில் சிக்கி உள்ளது.
பண்ருட்டி,
இது பற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய முந்திரிதோப்பில் இருந்து நேற்று காலையில் துர்நாற்றம் வீசியது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒரு முந்திரி மரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகி இருந்தது. இது பற்றி அறிந்ததும் அங்கு ஏராளமானோர் கூடினர்.
இந்த சம்பவம் பற்றி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றினர்.
அவரது உடலை பரிசோதனை செய்தபோது, சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:-
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு ஏ.அசன்அலி எழுதிக்கொள்ளும் மரண ஓலை. தொழிலாளியாகி நான் எனது வாழ்நாளில் அதிகமாக கஷ்டப்பட்டேன். பணத்துக்காக இறந்தவர்களின் உடலை புதைக்க சுடுகாட்டில் குழிதோண்டும் பணியை செய்து எனது குடும்பத்தை காப்பாற்றினேன். பரங்கிப்பேட்டை பள்ளி வாசலில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனது மகளை பி.காம். வரை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தேன். எனது மகன் மலேசியாவில் வேலை பார்க்கிறார்.
எனது மனைவி சர்புனிஷா, பரங்கிப்பேட்டை தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆடு வெட்டும் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு, என்னை சித்ரவதை செய்கிறார். என்னை மதிப்பதில்லை. சாப்பிட உணவு தருவதில்லை. எனவே மனமுடைந்த நான், எனக்கு நானே மரணம் தேடிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அசன்அலி எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story