திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெண்கல சிலை, சூலம் மாயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெண்கல சிலை, சூலம் மாயமாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் இணை ஆணையர் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சாமி சிலைகள், வெண்கலத்தினால் ஆன சிலைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இவை கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்று கொண்டார். புதிய இணை ஆணையர் பொறுப்பேற்றபிறகு கோவிலில் உள்ள சிலைகள், ஆபரணங்கள் போன்றவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் தொல்லியல் துறை ஆய்வாளர் மூலம் கோவிலில் உள்ள சிலைகளின் எண்ணிக்கை, சிலைகளின் நீளம், அகலம், எடை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வெண்கலத்தினால் ஆன தண்டாயுதபாணி சிலையும், ஒரு சூலமும் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இணை ஆணையர் கூறுகையில், “அருணாசலேஸ்வரர் கோவிலில் 164 சிலைகள் உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள சிலைகள் குறித்து பார்வையிட்டபோது வெண்கலத்தினால் ஆன தண்டாயுதபாணி சிலையும், ஒரு சூலமும் மாயமாகி உள்ளது தெரியவந்தது. கடந்த 1959-ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட பட்டியலில் இவற்றின் விவரங்கள் உள்ளன. இவை எப்போது திருடப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள அஷ்டபந்தனத்தை பெயர்த்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளை போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து எந்தவித அறிவிப்புமின்றி திடீரென ரகசியமாக அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், “அஷ்டபந்தனத்தை பெயர்த்து நகைகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்துவேன். அருணாசலேஸ்வரர் கோவிலில் பழங்கால சாமி சிலைகள், நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கோவிலில் வெண்கல சிலையும், சூலமும் மாயமான சம்பவம் பக்தர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story