தூத்துக்குடி வன்முறை சம்பவம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், மத்தியபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வன்முறை சம்பவத்தில் கைதாகி பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள சிவத்தையாபுரத்தை சேர்ந்த ஜெயபாண்டி மகன் குருபரணி (வயது 36), தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருண் என்ற ராஜா (37) ஆகியோர் மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் வன்முறை சம்பவம் தொடர்பாக வழக்குகள் உள்ளன.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்படி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார், குருபரணி, அருண் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் வழங்கினார்.
Related Tags :
Next Story