நண்பருடன் மோட்டர் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி தனியார் பள்ளி ஆசிரியை சாவு
தாம்பரம், முடிச்சூர் சாலையில் லாரி மோதியதில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர், 11–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் தேவகி (வயது 27). இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை 7:30 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக பெருங்களத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு தனது நண்பர் பாலுசந்திரன் (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தாம்பரம், கிருஷ்ணா நகர், முடிச்சூர் சாலையில் சென்றபோது மண்ணிவாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த தேவகி சாலையில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் தேவகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலுசந்திரன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட தாம்பரம்–முடிச்சூர் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த சாலை தற்போது குறுகலாகவே உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இதனால் முடிச்சூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.
தற்போது ஆசிரியை உயிரிழப்புக்கு ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளே காரணம் என்றும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பணிகளை விரைந்து முடிக்கும்படியும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.