விவசாயியை கத்தியால் குத்திய 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியை கத்தியால் குத்திய 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 July 2018 3:15 AM IST (Updated: 11 July 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

கொடுக்கல் வாங்கல் தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்,

முதுகுளத்தூர் அருகே உள்ள எட்டிசேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி வைரவராஜ் (வயது 50). இவர் கீழக்காஞ்சிரங் குளத்தை சேர்ந்த முனியசாமி மகன் முருகன்(45) என்பவருக்கு வீடு கட்டுவதற்காக கடன் கொடுத்து இருந்தாராம். இந்த பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 5.9.2011 அன்று முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே வைரவராஜ் முருகனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே கை கலப்பு ஏற்பட்டது. முருகனும், தூரி கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் சண்முகவேலு(50) என்பவரும் சேர்ந்து வைரவராஜை சாதியை சொல்லி திட்டியதுடன் கத்தியால் குத்தினராம். இதில் காயம் அடைந்த வைரவராஜ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து முருகன், சண்முகவேலு ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கயல்விழி கொலை முயற்சி வழக்கின்கீழ் முருகன், சண்முகவேல் ஆகியோருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த அபராத தொகையில் தலா ரூ.9,500-ஐ பாதிக்கப்பட்ட வைரவராஜுக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமராஜ் ஆஜரானார்.

Next Story