மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள அறிவிப்புகள் இல்லை இந்திய கம்யூனிஸ்டு அறிக்கை


மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள அறிவிப்புகள் இல்லை இந்திய கம்யூனிஸ்டு அறிக்கை
x
தினத்தந்தி 12 July 2018 12:50 AM IST (Updated: 12 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற கூட்டத்தொடரில் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள அறிவிப்புகள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

ராஜபாளையம்,

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக 15-வது சட்டமன்ற பேரவையின் 4-வது கூட்டத்தொடரின் முதல் மற்றும் இரண்டாவது கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. வறட்சியால் மானாவாரி விவசாயம், பலன் தரும் மா, தென்னை, புன்செய், நன்செய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி, பஞ்சாலை,கைத்தறி, விசைத்தறி, மருத்துவதுணி, கட்டுமான தொழில்கள் போன்றவை கடும் நெருக்கடியை சந்தித்து மிகவும் பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகிறது.

வறட்சியை பயன்படுத்தி வருவாய்த்துறை துணையுடன் கண்மாய் ஏரிகளில் சவுடு மண் என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டு சுமார் 35 ஆயிரம் பென்சன்தாரர்கள் தினமும் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தில் இருந்து வத்திராயிருப்பு தனி வருவாய் வட்டாரமாக முதல்-அமைச்சர் அறிவித்தது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அமைச்சர் உதயகுமார் தனது சொந்த தொகுதியில் கள்ளிக்குடி தனி வருவாய் வட்டாரமாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.


கடந்த காலத்தில் ராஜபாளையம் வருவாய் வட்டாரத்தை சிவகாசி கோட்டத்தில் இருந்து பிரித்து சாத்தூர் கோட்டாட்சியர் கீழ் சேர்த்ததன் விளைவாக ராஜபாளையம் பகுதி மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை தீவிரப்படுத்தும் போது ஸ்ரீவில்லிப்புத்தூர்-ராஜபாளையம் புறவழிச்சாலை அமைக்க காலம் தாழ்த்துவது ஏன்? எனவே வத்திராயிருப்பு தனி வருவாய் வட்டாரமாகவும், விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி திட்டமிட்டபடி அமையவும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர் புறவழிச்சாலை செயல்படுத்தவும், சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story