அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை
வரும் காலங்களில் அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி கூறினார்.
கடலூர்,
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
வருகிற 31-ந்தேதிக்குள் அறிவியல் விழிப்புணர்வு விருதுக்கு தகுதியான மாணவர்களை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுங்கள். மாணவர்களை மாநில அளவில் ஒருங்கிணைக்கக்கூடிய இணையதளத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆஷா கிறிஸ்டி எமரால்டு, செல்வராஜ், செல்வகுமார், திருமுருகன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 2,234 பள்ளிக்கூடங்கள் உள்ளன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இம்மாத இறுதிக்குள் கிடைக்கும். ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை தினமும் காலையில் (குறுந்தகவல்) எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அதேபோல் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களையும் கலெக்டர் அலுவலகத்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ‘கட்’ அடித்தால், அவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பாடங்களை நடத்துவது எப்படி? என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கடந்த 9-ந்தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்புகளில் சேரும் மாணவர்கள் அறிவியல் பாடப்பிரிவை விட மற்ற பாடப்பிரிவுகளையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.
அரசு பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வருகிற 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story