வரைவு பட்டியல் வெளியீடு: ஈரோடு மாவட்டத்தில் 2,201 வாக்குச்சாவடிகள் 16-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்


வரைவு பட்டியல் வெளியீடு: ஈரோடு மாவட்டத்தில் 2,201 வாக்குச்சாவடிகள் 16-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 July 2018 4:30 AM IST (Updated: 12 July 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 201 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதுதொடர்பான கருத்துகளை வருகிற 16-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

வாக்குச்சாவடி பட்டியல் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி மறுசீரமைப்பு செய்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,200 வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கும், வாக்குச்சாவடி தொலைவு அடிப்படையிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 115 வாக்குச்சாவடிகள் இருந்தன. மறுசீராய்வுக்கு பிறகு 86 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு தற்போது 2 ஆயிரத்து 201 வாக்குச்சாவடிகள் உள்ளன.


இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான கருத்து இருந்தால் சம்பந்தப்பட்ட உதவி வாக்குப்பதிவு அதிகாரி, தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக் டர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக வருகிற 16-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

கூட்டத்தில் வாக்காளர் பதிவு அதிகாரிகள் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story