உலகின் 2-வது பழமையான மருத்துவ மையம்: சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு வயது 200


உலகின் 2-வது பழமையான மருத்துவ மையம்: சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு வயது 200
x
தினத்தந்தி 12 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

உலகின் 2-வது பழமையான மருத்துவ மையமான சென்னை அரசு கண் ஆஸ்பத்திரி 200-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

சென்னை,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1809-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்பீல்டு கண் ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக 1819-ம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை ‘பழைய மெட்ராஸ் கிளப்’ அருகே டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் கண் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது.

1844-ம் ஆண்டு இந்த ஆஸ்பத்திரி சென்னை எழும்பூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆஸ்பத்திரி, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


தற்போது எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி உலகில் 2-வது பழமையான கண் ஆஸ்பத்திரியாகவும், ஆசியாவிலேயே முதல் தொன்மையான கண் ஆஸ்பத்திரி என்ற அந்தஸ்தையும் பெற்று உள்ளது.

உலக அளவில் கண் மருத்துவத்துக்கு என்று முதல் முதலாக அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு தொன்மை மாறாமல் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 1850 முதல் 1920-ம் ஆண்டு வரை பணியாற்றிய டாக்டர்கள் எழுதிய மருத்துவ குறிப்புகளும், மருத்துவ உபகரண கருவிகளும் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


வைரஸ் மூலம் கண்களில் பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ நோயை இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த டாக்டர் கிரிக் பேட்ரிக் தான் முதன்முதலில் கண்டுபிடித்தார். அதேபோல் கண்புரை அறுவை சிகிச்சை முதன்முதலில் இங்கு தான் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே முதன் முறையாக 1926-ம் ஆண்டு கண் மருத்துவம் சம்பந்தமான படிப்பும், 1948-ம் ஆண்டு கண் வங்கியும் இந்த ஆஸ்பத்திரியில் தான் தொடங்கப்பட்டது.


தி.மு.க. தலைவர் கருணாநிதி 1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த போது, எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் 5 நாட்கள் தங்கி கண் நோய்க்கு சிகிச்சை பெற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் போன்ற மூத்த அரசியல்வாதிகளும் இங்கு கண் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கண் நோய்களுக்கு உயர்தர சிகிச்சை மையமாக எழும்பூர் கண் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கண் டாக்டர்கள், மயக்கவியல் டாக்டர்கள் மூலம் 24 மணி நேரமும் கண் விபத்து சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பலரும் எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.


தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள். தினசரி 760 வெளிநோயாளிகளும், 261 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள். சராசரியாக தினந்தோறும் 43 பெரிய அறுவை சிகிச்சைகளும், 60 சிறிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்தில் 286 பேருக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சராசரியாக மாதம் 90 பேர் தங்களது கண்களை தானம் செய்வதாக பதிவு செய்கிறார்கள். இதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தினசரி 9 முதல் 12 கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.


1985-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2.60 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 1981-ம் ஆண்டு முதல் இதுவரை 6 ஆயிரத்து 890 கண்கள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை கிடைத்துள்ளது. எனவே எழும்பூர் கண் ஆஸ்பத்திரி, இருள் சூழ்ந்த பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் மகுடமாக திகழ்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி கட்டிடம் தொன்மை மாறாமல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் வெளித்தோற்றம் இப்போதும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

அறுவை சிகிச்சை அரங்குகள் மட்டும் நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளது. 200-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு உலகின் முதல் பழமையான கண் ஆஸ்பத்திரியான ‘மார்பீல்டு’ நிர்வாகம் சார்பில் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story