மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் திரண்டதால் பரபரப்பு
தளவாய்பட்டணத்தில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மூடப்பட்டது. இதையடுத்து கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையானவர்கள் கூலி தொழிலாளர்கள். தளவாய்பட்டணத்தை சேர்ந்தவர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாராபுரம், காரத்தொழுவு, சந்திராபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மது குடிக்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தளவாய்பட்டணத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். தங்களின் அலைச்சல் குறைந்ததோடு பக்கத்திலேயே டாஸ்மாக் கடை திறந்ததால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர். இதனால் அந்த புதிய டாஸ்மாக் கடையில் வியாபாரம் சக்கைபோடு போட்டது.
இந்த நிலையில் நேற்றும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனே கடையை மூட வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உள்ளனர். இதனால் நேற்று திடீரென்று மது விற்பனை நிறுத்தப்பட்டு கடை மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள், தங்களது மகிழ்ச்சி நீடிக்க வில்லையே என கவலை அடைந்தனர். எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று மதுப்பிரியர்கள் அனைவரும் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு தொடர்ந்து மீண்டும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடையின் முன் நின்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை குறித்து அவர்கள் கூறும்போது “ தளவாய்பட்டணம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த நிலையில் இந்த கடை மூடப்பட்டு இருப்பது வருத்தமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடை தொடர்ந்து இங்கு செயல்பட ஆவண செய்யவேண்டும்”. என்றனர்.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் தளவாய்பட்டணத்தை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடைக்கு ஆதரவு தெரிவித்த மதுப்பிரியர்கள் சிலர் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:-
தளவாய்பட்டணத்தில் பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனம் வர உள்ளதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் நேற்று முன்தினம் மதியம் ஒரு வேனில் மது பானங்களை கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து இன்று (நேற்று) காலை ஒரு லாரியில் மதுபானங்களை கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்ய முயன்றனர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சிறிது நேரம் விற்பனையை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் மதுபான விற்பனையை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கியம் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதை தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story