பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி நிலப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி


பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி நிலப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி
x
தினத்தந்தி 12 July 2018 9:31 AM GMT (Updated: 12 July 2018 9:31 AM GMT)

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டார்.

நிலப்பிரச்சினை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து ஆறுமுகம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 73). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அல்போன்ஸ் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், விரக்தி அடைந்த அவர், 11-ந் தேதி காலை 10 மணிக்கு (அதாவது நேற்று) பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக அவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

தான் எழுதிய கடிதம் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கும். ஆயினும் நடவடிக்கை எதுவும் இல்லையே என்று ஆதங்கம் அடைந்த அவர் நேற்று காலை பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வந்து நின்றார்.

தீக்குளிக்க முயற்சி

திடீரென தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து ஊழியர்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் போலீசாருடன் செல்ல மறுத்து, தான் நடந்தே வருவதாக கூறினார்.

அதன்படி அவர் நடந்தே போலீஸ் நிலையம் சென்றார். அங்கு சென்றதும், போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு, பிரச்சினைக்கு தீர்வு கேட்டு கோஷமிட்டார். போலீசார் அவரை உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story