சத்தியமங்கலம் அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்திய 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


சத்தியமங்கலம் அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்திய 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 12 July 2018 11:15 PM GMT (Updated: 12 July 2018 7:40 PM GMT)

சத்தியமங்கலம் அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்திய 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதிக்குள் 5 பேர் நின்று கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களிடம் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் 5 பேரிடமும் தலா 3 சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.


விசாரணையில் அவர்கள், ‘கெம்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள கரலையம்தொட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 28), மாதன் (27), நஞ்சன் (60), பூட்டார்தொட்டியை சேர்ந்த சேகர் (28), பவளக்குட்டையை சேர்ந்த சடையப்பன் (30) என்பதும், வனப்பகுதியில் இருந்து சந்தன மரத்தை வெட்டி அதன் கட்டைகளை விற்பனைக்காக கடத்தியதும்,’ தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரிடம் இருந்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், சந்தன மரக்கட்டைகளை கடத்தியதாக அவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story