காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2018 11:44 PM GMT (Updated: 12 July 2018 11:44 PM GMT)

நெய்வேலி அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள கீழுர் ஊராட்சிக்குட்பட்டது பெரியகோயில்குப்பம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் பொருத்தி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு மற்றும் மின்மோட்டார் பழுது காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் சென்னை-கும்பகோணம் சாலையில் நெய்வேலி அடுத்த கன்னியாக்கோவில் ஓடை பாலம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இவர்களது பேச்சுவார்த்தையை கேட்காத கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குறிஞ்சிப்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி நேரில் வந்து, இன்று(அதாவது நேற்று) மாலை முதல் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை- கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story