மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 July 2018 4:45 AM IST (Updated: 14 July 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. உதவி கலெக்டர் வேணுசேகரன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் தெங்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பத்மநாபன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று கூறி உதவி கலெக்டர் வேணுசேகரனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தெங்கால் ஊராட்சி பகுதியை சுற்றியுள்ள நவ்லாக், மேட்டுத்தெங்கால், மணியம்பட்டு, மேல்விஷாரம், திமிரி, சிப்காட், பெல் நரசிங்கபுரம், வேலூர், சத்துவாச்சாரி உள்பட பகுதியில் சுமார் 5 லட்சம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளுக்கு இங்குள்ள பாலாற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தமிழக அரசு மூலம் மணல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் வாலாஜா தாலுகாவை சேர்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களும், இதை சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் ஆதாரம் அழிந்து விடும். எனவே, இந்த பகுதியில் மணல் குவாரி தொடங்ககூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ், ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மணிவாசகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் எல்.சி.மணி பேசுகையில், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, விஷாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டன் சூதாட்டம், போலி லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை ஆகியவை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் நெமிலி, வாலாஜா வட்ட பகுதிகளில் பட்டா மாற்றம், நில அளவீடு செய்தல் உள்பட பணிகள் காலதாமதமாக நடைபெறுகிறது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசினர்.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும், அவர்களின் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் கூறினார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story