அம்பேத்கர் நினைவு மண்டபம் 2020-ல் பயன்பாட்டுக்கு வரும் முதல்-மந்திரி உறுதி


அம்பேத்கர் நினைவு மண்டபம் 2020-ல் பயன்பாட்டுக்கு வரும் முதல்-மந்திரி உறுதி
x
தினத்தந்தி 13 July 2018 11:55 PM GMT (Updated: 13 July 2018 11:55 PM GMT)

மும்பையில் பிரமாண்டமாக கட்டப்படும் அம்பேத்கர் நினைவு மண்டபம் வருகிற 2020-ம் ஆண்டுக் குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என முதல்-மந்திரி பட்னாவிஸ் உறுதி அளித்தார்.

நாக்பூர்,

மும்பை இந்துமில் வளாகத்தில் அம்பேத்கருக்கு பிரமாண்டமாக நினைவு மண்டபம் கட்டுவது தொடர்பாக மராட்டிய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி நினைவு மண்டப பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆனால் இந்த பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இது தொடர்பாக நேற்று மராட்டிய மேல்-சபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மற்றும் உறுப்பினர்கள் பிரகாஷ் கஜ்பியே, சஞ்சய் தத், சரத் ரன்பிஸ் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய பிரகாஷ் கஜ்பியே(தேசியவாத காங்கிரஸ்), அம்பேத்கர் நினைவு மண்டபம் அமைப்பதற்காக இந்துமில் பகுதியில் 12.5 ஏக்கர் நிலப் பரப்பை கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் நினைவு மண்டபத்துக்கான பல்வேறு துறைசார் அனுமதிகள் இன்னமும் பெறப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி பட்னாவிஸ், இந்துமில் பகுதியில் நினைவு மண்டபம் அமைப்பதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மாநில அரசுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக கூறினார்.

இது தவிர மண்டபம் அமைப்பதற்கான டெண்டர் நிறைவு பெற்று கட்டிட வேலைகள் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

மும்பை இந்துமில் பகுதியில் அம்பேத்கர் நினைவு மண்டபம் கட்டுவதில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படவில்லை. இந்த திட்டத்துக்காக எம்.எம்.ஆர்.டி.ஏ. தனது பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிதி வழங்கவும் வகை செய்துள்ளது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவு மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி சந்திரகாந்த் படோலே, அம்பேத்கர் நினைவு மண்டபத்தின் வரைவு திட்டம் குறித்து, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, பிரகாஷ் அம்பேத்கர், ஆனந்த்ராஜ் அம்பேத்கர் மற்றும் ஜோகேந்திர காடே உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி அனைவரிடமும் சம்மதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

நீங்கள்(எதிர்க்கட்சிகள்) என்னை நோக்கி அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுகிறீர்கள். கடந்த 15 வருட ஆட்சியில் நீங்கள்(காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) என்ன செய்தீர்கள் என நான் கேட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் அம்பேத்கரை எந்தளவுக்கு மதிக்கிறீர்களோ அதே அளவுக்கு நானும் மதிக்கிறேன். இந்த திட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story