ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சிக்கான செயல் திட்ட அறிக்கையை 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சிக்கான செயல் திட்ட அறிக்கையை 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2018 11:45 PM GMT (Updated: 14 July 2018 7:20 PM GMT)

ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சிக்கான செயல்திட்டத்தினை தயாரித்து விரிவான அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


கலசபாக்கம்,

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டுக்கான ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சிக்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜமுனாமரத்தூரில் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவையான விரிவான செயல் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறினர்.


அப்போது அனைத்துத் துறை அதிகாரிகளும் 2018- 19-ம் ஆண்டுக்கான ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சிக்கான செயல் திட்டத்தினை தயாரித்து விரிவான அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், இந்தியன் வங்கி, காதி வாரியம், பொது நூலகத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அத்திப்பட்டு, மேலூர், எட்டிமரத்தூர், மார்கனூர், கோவிலானூர், கொண்டிகாலூர், புதுப்பட்டு, மலைக்கொல்லை 1, மலைக்கொல்லை 2 ஆகிய சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் 165 மாணவ, மாணவிகளுக்கு கைவினை செய்யும் மூலப்பொருட்கள், தையல் எந்திரம், விளையாட்டு பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்லாமல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாடங்களை படித்து புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்த தெரிய வேண்டும். நன்றாக படித்து எதிர்காலத்தில் கல்லூரி வகுப்புகளில் சேர வேண்டும். அதேபோன்று மாணவர்கள் அனைவரும் கைவினைப் பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து கோவிலூர் ஊராட்சியை சேர்ந்த ராமன், வீரப்பனூர் ஊராட்சியை சேர்ந்த ராஜீ ஆகியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணை வழங்கினார். மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பழங்குடியின மலைவாழ் பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கினார்.

Next Story