நீர்மட்டம் 85 அடியை தாண்டியதால் அமராவதி அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது


நீர்மட்டம் 85 அடியை தாண்டியதால் அமராவதி அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 16 July 2018 10:33 PM GMT (Updated: 16 July 2018 10:33 PM GMT)

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தளி, 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து வழக்கமாக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் கன அடிக்கும் மேலாக நீர்வரத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அணையின் நீர்் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 13-ந்தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி அமராவதி ஆற்றில் 10 நாட்களுக்கும் பிரதான கால்வாயில் 15 நாட்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கருகும் நிலையில் இருந்த தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பாற்றப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்ததுடன் குறுவைநெல் சாகுபடிக்கான பணிகளையும் தொடங்கினர்.

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு தீவிரமடையாததால் அணைக்கு நீர்வரத்தும் திடீரென குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணைக்கு குறைவான அளவு தண்ணீர் வந்ததால் அணையின் நீர்்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 9-ந்தேதி முதல் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு தொடர் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 3 நாட்களாக அமராவதி அணையின் நீராதாரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அணை நிரம்பும் சூழல் நிலவியதால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு-பகலாக அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்து வந்தனர். அத்துடன் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான பணிகளில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி அணையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி மூலம் அபாய ஒலியை பொதுப்பணித்துறையினர் எழுப்பினார்கள். அதற்குள்ளாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து திடீரென குறையத்தொடங்கியது. இதனால் அணை நிரம்புவதில் காலதாமதம் நிலவியது.

இந்த சூழலில் எதிர்பாராத விதமாக நேற்றுகாலை முதல் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதன் காரணமாக நேற்று பகல் 12 மணியளவில் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.

அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பை கருதி அங்குள்ள ஒன்பது கண் மதகுகள் மூலமாக ஒவ்வொரு ஷட்டர்கள் வழியாகவும் தலா 1000 கனஅடி வீதம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் “கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தோம். அதன்படி அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் பாசனத்திற்காக அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர். அதைத்தொடர்ந்து சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தோம். இந்த சூழலில் மழைபொழிவு குறைந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதையொட்டி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதற்கிடையில் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்து விட்டதால் நேற்று மதியம் முதல் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்இருப்பு 70 அடியை தாண்டியவுடன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் எங்களுக்கும் பயன் உள்ளதாக இருந்திருக்கும். சாகுபடி பணிகளை தொடர்வதற்கு உதவிகரமாக அமைந்திருக்கும். ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் யாருக்கும் எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story