பிரம்மதேசம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்


பிரம்மதேசம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 18 July 2018 3:49 AM IST (Updated: 18 July 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

பிரம்மதேசம்,

மரக்காணம் அருகே உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). விவசாயி. இவரது மனைவி சிவகாந்தி (45). நேற்று முன்தினம் இரவு இவர் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது சமையலறையில் இருந்து சிவகாந்தி வெளியே வந்து நின்றார். இந்த நிலையில் திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. உடன் சிவகாந்தி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார்.

இதற்கிடையே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பற்றிய தீ, கூரை வீட்டின் மீது பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் பெருமாள் வீட்டில் பற்றி எரிந்த தீ, அருகில் இருந்த சீனிவாசன், மோகன் ஆகியோரது கூரை வீடுகள் மற்றும் 2 வைக்கோல் போருக்கும் பரவி அவைகளும் தீப்பிடித்து எரிந்தன.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்த, மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடியே அவர்களால் தீயை முழுவதும் அணைக்க முடிந்தது.

இதில் 3 பேரின் வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் பெருமாள் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் தீயில் கருகி செத்தன. இதன் மொத்த சேதமதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story