நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
ஆண்டிப்பட்டி,
முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட போதும், அதே அளவிலான தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் வைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,573 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் போடி, உத்தமபாளையம் போன்ற பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,076 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 1,771 கனஅடியாக அதிகரித்தது.
இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் 48.20 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 48.88 அடியாக உயர்ந்தது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பரவலாக பெய்து வரும் நிலையில், வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இனிவரும் நாட்களில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை அணையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினமும் 70 பரிசல்களில் மீன்கள் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் வைகை அணை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறுகிறது. வைகை அணையை பொறுத்தவரையில் கட்லா, மிருகால், ரோகு வகையை சேர்ந்த மீன்கள் ஒருநாளைக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் வைகை அணையில் மீன்கள் பிடிபடுவது குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் வைகை அணையில் ஒருநாளைக்கு 100 கிலோ அளவிலான மீன்கள் மட்டுமே பிடுபடுகிறது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் நலனுக்காக வைகை அணை நீர்தேக்க பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும். கடந்த ஆண்டு சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகள் நீர்தேக்கத்தில் விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான நுண்மீன்குஞ்சுகள் இதுவரையில் விடப்படவில்லை. எனவே மீன்குஞ்சுகளை நீர்தேக்கத்தில் வளர்ப்புக்கு விட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story