111 மகளிர் குழுக்களுக்கு ரூ.5½ கோடி கடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்


111 மகளிர் குழுக்களுக்கு ரூ.5½ கோடி கடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 8:22 PM IST)
t-max-icont-min-icon

இந்தியன் வங்கி சார்பில் 111 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5½ கோடி கடனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

நாகர்கோவில்,

சென்னையை தலைமை இடமாக கொண்டு 15–8–1907 அன்று செயல்படத் தொடங்கிய இந்தியன் வங்கி, இந்த ஆண்டு தனது 111–வது ஆண்டை கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் நாட்டில் உள்ள அனைத்து இந்தியன் வங்கி கிளைகளிலும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் மாதமாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 21 கிளைகள் சார்பில் 111 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியே 66 லட்சம் கடன் வழங்கும் விழா நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, 1,091 மகளிர் பயன்பெறும் வகையில் குழு கடன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

பெண்கள் இந்த நாட்டின் கண்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆண்களைவிட பெண்கள் தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

மகளிர் சுயஉதவிக்குழு ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தக்கூடியதாக இருந்து வருகிறது. குறிப்பாக சுயதொழில் செய்வதில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக இருந்து வருகிறார்கள். இதேபோல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும். தொழில்துறையில் பெண்கள் இன்னும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திக் தயாள், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் கோபிகிருஷ்ணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி கலைஅரசன், குமரி மாவட்ட இந்தியன் வங்கி கிளை மேலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் இந்தியன் வங்கி கிளை முதன்மை மேலாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நந்தகுமார் செய்திருந்தார்.

Next Story