சாலைவரி செலுத்தாத 127 வாகனங்களின் அனுமதி ரத்து கலெக்டர் நடராஜன் உத்தரவு


சாலைவரி செலுத்தாத 127 வாகனங்களின் அனுமதி ரத்து கலெக்டர் நடராஜன் உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2018 5:00 AM IST (Updated: 18 July 2018 11:35 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 127 வாகனங்களின் அனுமதியை ரத்து செய்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை முடிவடைந்த முதல் காலாண்டிற்கான சாலை வரி செலுத்த வேண்டும். இந்த வரியை செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னும் வரி செலுத்தாத 127 வாகனங்களின் அனுமதி சீட்டை ரத்து செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை ஏற்று 60 சரக்கு வாகனங்கள், 67 பயணிகள் போக்குவரத்து வாகனம் என மொத்தம் 127 வாகனங்களின் அனுமதியை ரத்து செய்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த வாகனங்கள் சாலைகளில் இயங்க தடைவிதிக்கப்பட்டுஉள்ளது. இதனை மீறி இயக்கினால் பறிமுதல் செய்யப்படும். உடனடியாக சாலைவரியை செலுத்தி அனுமதி சீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும், மாவட்டத்தில் வாகன இயக்குபவர்கள் குறிப்பட்ட கால அவகாசத்திற்குள் சாலைவரி செலுத்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டி பயிற்சி பெறுவதற்கு அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் இதுவரை கனரக வாகனங்கள் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டு உரிமம் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெறுவதற்கு எரிபொருள் சிக்கன பயிற்சியும் பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. இதன்படி பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் 5 கிலோமீட்டர் தூரத்திலான சாலையில் 3 வேகத்தடைகளை தாண்டி குறிப்பிட்ட எரிபொருளில் கடந்து செல்வதை உறுதி செய்யும் அளவிற்கு பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழையும் இணைத்து வழங்கினால்தான் கனரக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.


இதற்காக பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் தங்களின் பயிற்சி கனரக வாகனத்தில் எரிபொருள் சிக்கன அளவீட்டு கருவி பொருத்தி அதன் அடிப்படையில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த கருவியை பொருத்துவதற்கு ஏதுவாக காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து எரிபொருள் சிக்கன அளவீட்டு கருவி பொருத்தப்பட்ட மாதிரி வாகனம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த மாதிரியின் அடிப்படையில் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் தங்களின் கனரக பயிற்சி வாகனத்தில் கருவியை பொருத்தி பயிற்சி அளித்து அந்த சான்றிதழையும் இணைத்து வழங்கினால் மட்டுமே கனரக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார்.

Next Story