தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது
தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிப்பிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் இந்த மலைக்காய்கறிகள் அதிக விளைச்சலை தருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலைக்காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். அறுவடை செய்யப்படும் மலைக்காய்கறிகள் சரக்கு வாகனங்கள், லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம், கோவை, அவினாசி, திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி சேறாக உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தொடர் மழையால் காய்கறிகள் அழுகியும் வருகின்றன. சில விவசாயிகள் முன்கூட்டியே காய்கறிகளை அறுவடை செய்து விட்டனர். இருந்தாலும், தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலைக்காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது.
கிராமங்களில் அறுவடை செய்யப்படும் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சுத்திகரிப்பு எந்திரங்களில் சுத்திகரித்து விவசாயிகள் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக ஊட்டி நகராட்சிக்கு விற்பனைக்கு வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு தேவையான காய்கறிகளை முழுமையாக வாங்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பீட்ரூட் கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ.55 முதல் ரூ.70 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், முட்டைக்கோஸ்-ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் வரத்து குறைவால் ரூ.65 ஆக விலை அதிகரித்து உள்ளது. விளைநிலங்களில் விவசாய தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டால், அவர்களது கால்கள் சேற்றில் பதியும் நிலை காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து குறைவால் வெளியிடங்களுக்கு அனுப்புவதும் குறைந்து உள்ளது. மழை குறைந்தால் தான் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story