சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்


சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 11:30 PM GMT)

சாப்பாடு கூட கொடுக்காமல் சித்ரவதைக்கு ஆளான கர்ப்பிணி தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி ரெயின்போ நகர் 8-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த குமாரபாலுபதி. இவருக்கும் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது திவ்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே குமாரபாலுபதி தனது மனைவியை சிறிது நாட்கள் கடலூரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரபாலுபதி விவகாரத்து கேட்டு தனது மனைவி திவ்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா நேற்று மாலை தனது தாய் மற்றும் மாதர் சங்கத்தினருடன் புதுவை ரெயின்போ நகரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார். அவர் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.


பின்னர் அவர்களை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், நாளை(இன்று) காலை 10 மணிக்கு குமாரபாலுபதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். அங்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து திவ்யா கூறியதாவது:-

திருமணத்திற்கு 20 சவரன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுத்தோம். அவர் ஏற்கனவே முதல் திருமணம் ஆனதை மறைத்து என்னை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது சீர்வரிசை வாங்கி வரும்படி என்னை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சீர்வரிசையுடன் வந்த தந்தையை திட்டி அனுப்பினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான என் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். மீண்டும் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் எங்களை சமாதானம் செய்து வைத்தனர். அதன்பின்னர் என்னை அவர்கள் வீட்டு அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமை படுத்தினர்.

அக்கம்பக்கத்தினர் எனக்கு சாப்பாடு கொடுத்தனர். எனது கணவர் வேலை விஷயமாக வெளியில் செல்வதாக கூறி என்னை தாய் வீட்டில் விட்டு சென்றார். ஒரு வாரம் கழித்து வந்தபோது, கதவை திறக்காமல் வெளியில் நிற்க வைத்தனர். தற்போது நான் 3 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனது ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, துணிகள் அனைத்தும் அவரது வீட்டில் உள்ளது. என்னால் ஆதார் கார்டு இல்லாமல், ஸ்கேன் கூட எடுக்க முடியவில்லை. இப்போது திடீரென விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நான் கர்ப்பிணியாக இருக்கிறேன், எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story