விருதுநகர் நகராட்சியில் குப்பை வரி வசூலிக்கப்படும் நிலையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்


விருதுநகர் நகராட்சியில் குப்பை வரி வசூலிக்கப்படும் நிலையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 6:49 PM GMT)

விருதுநகர் நகராட்சியில் ரூ.7 லட்சம் வரை குப்பை வரி வசூலிக்கப்படும் நிலையில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

இது குறித்து விருதுநகர் முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் பாலகிருஷ்ண சாமி, நகராட்சி கமிஷனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப் பதாவது:-

விருதுநகர் நகராட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் 247 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் விடுமுறையில் சென்றால் பணி பாதிக்காமல் இருக்க பதில் தொழிலாளர்களும் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 100-க்கும் குறைவாகவே நிரந்தர துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். நகரசபை பகுதி விரிவாக்கம் ஆகிவிட்ட நிலையில் குறைந்தபட்சம் 300 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். நகராட்சி நிர்வாக ஆணையர் விருதுநகர் நகராட்சிக்கு விதிமுறைகளின்படி கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க மறுக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 60 துப்புரவு பணியாளர்களை நியமித்துள்ளது. ஆனாலும் நகரில் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.


இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி நகராட்சிகளில் குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. விருதுநகர் நகராட்சியை பொறுத்தமட்டில் 26 ஆயிரம் வரி விதிப்பு உள்ள நிலையில் வரி விதிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.30 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் நகராட்சி நிர்வாகத்துக்கு குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் தனியாக கிடைக்கும் நிலை உள்ளது. விருதுநகர் நகராட்சியின் நிதி நிலைமை கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க இடம் தராது என்ற காரணத்தை காட்டியே அந்த நியமனத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் குப்பை வரி மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் நிலையில் அந்த பணத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் கூடுதல் நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து நகரில் துப்புரவு பணியை மேம்படுத்த வேண்டும். மேலும் குப்பை அள்ளுவதற்கான ஒரு டிராக்டர் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மற்றொரு டிராக்டரையும் தகுதி சான்று பெற்று குப்பை அள்ள பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story