தொடர் மழையால் சம்பவம்: ஊட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் வீடு இடிந்தது
தொடர் மழையால் ஊட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் வீடு இடிந்தது. அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் சாலையோரம் மற்றும் குடியிருப்புகள் அருகே உள்ள மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தொடர் மழையால் மரங்கள் இருக்கும் பகுதியை கடந்து செல்லவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மழைக்கு மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஊட்டி-புதுமந்து சாலை பாரஸ்ட்கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரண்டு மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதில் ஒரு மரம் ராதா என்பவருக்கு சொந்தமான வீடு மீது விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த வீட்டின் மேற்கூரை இடிந்ததுடன், உள்ளே இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. மற்றொரு மரம் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கும் பகுதியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லை.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் மற்றொரு மரம் ஒன்று முறிந்து தனியாருக்கு சொந்தமான பணிமனை மீது விழுந்தது. இதில் பணிமனையின் மேற்கூரை சேதமானது. மேலும் மரம் விழுந்ததில் மின்கம்பம் வளைந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மின்வாள் கொண்டு மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் மரம் விழுந்ததில் வீடு இழந்த ராதாவுக்கு ரூ.5 ஆயிரம், இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
பாரஸ்ட்கேட் பகுதியில் வீடுகளை சுற்றி அபாயகரமான நிலையில் மரங்கள் உள்ளன. மிகவும் உயரமான அந்த மரங்கள் பலத்த காற்றுக்கு அசைந்தாடுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவர்கள் ஏற்கனவே அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் 23 அபாயகரமான மரங்களை கணக்கெடுத்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் முதல் கட்டமாக 4 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
உயரமான மரத்தில் ஊழியர் ஒருவர் ஏறி, மின்வாள் மூலம் சிறிது, சிறிதாக வெட்டியும், கயிறு கட்டி இழுத்தும் அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி விட்டு, மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றிய பின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
கூடலூர்-16, குந்தா-1, நடுவட்டம்-16, ஊட்டி-3.1, கல்லட்டி-1, கிளன்மார்கன்-14, அப்பர்பவானி-27, எமரால்டு-6, அவலாஞ்சி-39, கெத்தை-1, தேவாலா-48 என மொத்தம் 172.1 மழை பதிவாகி உள்ளது. இது சராசரியாக 10.12 ஆகும்.
Related Tags :
Next Story