திரிசூலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை
திரிசூலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், தென்காசி பகுதியை சேர்ந்த ரெயில்வே பணியாளர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அடுத்த மாதம்(ஆகஸ்டு) சென்னை விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் ரெயில் நிலையத்துக்கு அவர் வெடிகுண்டு வைக்கப்போவதாகவும், இதற்காக பயங்கரவாதிகளிடம் இருந்து ரூ.85 லட்சத்தை அவர் பெற்று கொண்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்று ரெயில்வே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் திரிசூலம் ரெயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் திரிசூலம் ரெயில் நிலையத்துக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த கடிதம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த கடிதத்தில் ஒரு ரெயில்வே பணியாளர் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கலாம். இருப்பினும் இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story