மாவட்டத்தில் ரூ.9.66 கோடியில் 644 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் ரூ.9.66 கோடியில் 644 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 9:54 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் நீர் சேகரிக்கும் வகையில் 2018-2019-ம் ஆண்டில் 644 பண்ணைக்குட்டைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி, விவசாய நிலங்களில் கரை மேம்பாடு, தடுப்பணை கட்டும் பணி, பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, அங்கன்வாடி மையம் அமைத்தல், முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமைவீடுகள் கட்டும் பணி, தார்சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கபுரம், ஆயிபாளையம், கூனவேலம்பட்டி, காக்காவேரி ஆகிய ஊராட்சிகளில் ரூ.79.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலாவதாக குருக்கபுரம் ஊராட்சி கொளஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து குருக்கபுரம் ஊராட்சியில் ரூ.1.46 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும், குருக்கபுரம்-பரக்கால்பட்டி வரையிலான 2.130 மீட்டர் நீளத்திற்கு ரூ.17.54 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் ஆயிபாளையம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடத்தினை பார்வையிட்டார். கூனவேலம்பட்டி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து கூனவேலம்பட்டி ஊராட்சியில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்பணை, காக்காவேரி ஊராட்சியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், பூசாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் பணி உள்பட ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.79.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் முதல்-அமைச்சரின் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடுகட்டும் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 535 வீடுகள் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இந்த வீடுகளில் தனிநபர் கழிப்பறை ரூ.12,000 மானியத்தில் கட்டப்படும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 32 தடுப்பணைகள் ரூ.1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் 32 பணிகள் ரூ.1 கோடியே 68 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டிலும், 449 விவசாயிகளின் நிலங்களில் 183 கிலோமீட்டர் நீளத்திற்கு கரை மேம்பாட்டு பணிகள் ரூ.2 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டிலும், விவசாய நிலங்களில் 644 பண்ணைக்குட்டைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story