நந்திவரம்-கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் ஆசிரியரை நியமிக்கக்கோரி முற்றுகைப் போராட்டம்


நந்திவரம்-கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் ஆசிரியரை நியமிக்கக்கோரி முற்றுகைப் போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2018 4:10 AM IST (Updated: 20 July 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு பொது கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியரை உடனே நியமிக்க கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பொது கணினி அறிவியல் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை.

இதனால் கடந்த 1 மாதமாக இந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

நேற்று காலை மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஐதர் அலி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மாஸ்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு வந்த சில ஆசிரியர்களிடம், பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து பள்ளி தலைமை ஆசிரியர் விரைந்து வந்தார். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பெற்றோர்கள் இன்னும் இந்த பொது கணினி அறிவியல் பாடத்திற்கு புத்தகம் கூட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. உடனே பொது கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதற்கு தலைமை ஆசிரியர் பொது கணினி அறிவியல் பாடம் எடுக்க ஆசிரியர் இல்லை. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. பொது கணினி அறிவியல் பாடத்திற்கு உரிய புத்தகம் அரசிடம் இருந்து வரவில்லை.

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, உடனே இந்த பாடத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story