நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்


நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2018 10:45 PM GMT (Updated: 23 July 2018 9:09 PM GMT)

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு சந்திப்பில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.

குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. பலத்த காற்று காரணமாக உயர் அழுத்த மின் கம்பிகள் ஒன்றன் மீது ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீப்பொறிகள் விழுந்து குப்பையில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடனே இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குப்பை குவியலின் ஒரு பகுதியில் தீயை அணைத்தால் மற்றொரு பகுதியில் தீ பிடித்துக்கொண்டது. இதனால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பையை கிளறி, தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணி நேற்று மாலை வரை நடந்தது. எனினும் தீயை அணைக்க வீரர்கள் போராடினார்கள்.

எனவே தீயை அணைக்கும் பணி 2-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். குப்பை கிடங்கில் தீப்பற்றியதால் உருவான கரும்புகை குடியிருப்பு பகுதிக்கும் சென்றது. குப்பை எரிந்ததால் ஏற்பட்ட நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Next Story