அரசு பள்ளியில் புதிய முயற்சி: மாணவர்களின் செயல்பாடுகளை ‘ஸ்மார்ட்’ போனில் பார்க்கும் வசதி


அரசு பள்ளியில் புதிய முயற்சி: மாணவர்களின் செயல்பாடுகளை ‘ஸ்மார்ட்’ போனில் பார்க்கும் வசதி
x
தினத்தந்தி 25 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அரசு பள்ளியில் புதிய முயற்சியாக மாணவர்களின் செயல்பாடுகளை ‘ஸ்மார்ட்’ போனில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளியணை,

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பெற்றோரும், தங்களது குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்று எதிர்காலத்தில் சிறப்புடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்ற கனவுடன் பள்ளிக்கு அனுப்புகின்றனர். குருகுலமுறையில் தொடங்கிய கல்வி நிலையங்கள், திண்ணைப்பள்ளி, அரசுப்பள்ளி, தனியார் பள்ளி என நாளும் வளர்ந்து இன்று பற்பல தொழில் நுட்ப வசதிகளுடன் கல்வியை குழந்தைகளுக்கு கற்பித்து வருகின்றனர். இதில் தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் திறன் அதிக அளவில் உள்ளதாக கருதி பெற்றோர்கள், குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

இதனை அறிந்த தமிழக அரசு, அரசு பள்ளிகளில் தரத்தினை உயர்த்தி மாணவர்களின் வருகையை அதிகப்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. அதன்படி சமச்சீர் கல்வி முறை அறிமுகம், அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் என வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கும் புதிய முறையில் கற்பிக்கும் திறனை வளர்க்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம் பெறும் வகையில் ஆரம்பப்பள்ளியில் தொடங்கி மேல்நிலை வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் உருவாக்க தொடங்கிய அரசு முதற்கட்டமாக இந்த ஆண்டு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை அறிமுகம் செய்து உள்ளது. அந்த பாடநூல்களில் இடம்பெற்றுள்ள பாடங்களை வகுப்பறையில் ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்து கொண்டு கற்கவும், அப்பாடத்தின் ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள க்யூ.ஆர். கோடு அமைப்பை ஸ்கேனர் வசதி கொண்ட ‘ஸ்மார்ட்’ போனில் ஸ்கேன் செய்து அதன்மூலம் பாடத்தின் ஆடியோ, வீடியோ பதிவுகளை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த க்யூ.ஆர். கோடு வசதி கொண்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகரனுக்கு இந்த க்யூ.ஆர். கோடு அமைப்பை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உருவாக்கி அதன்மூலம் ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளையும், பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் பதிவிட்டால் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. இதனை தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்திடம் சொல்லி அவரின் அனுமதியுடன் ஆசிரியர் வெங்கடேஷ், ஆசிரியைகள் மகேஸ்வரி, வாசுகி, சசிகலா ஆகியோரின் உதவியுடன் இன்று ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக க்யூ.ஆர். கோடு அமைப்பு உருவாக்கப்பட்டு அது மாணவனின் அடையாள அட்டையில் பதிவிடப்பட்டு உள்ளது.

அந்த க்யூ.ஆர். கோடை ‘ஸ்மார்ட்’ போனில் ஸ்கேன் செய்யும் போது மாணவனின் பெயர், பிறந்த தேதி, படிக்கும் வகுப்பு, பள்ளிக்கு வருகை தந்த நாட்கள், விடுமுறை எடுத்த நாட்கள், ஒவ்வொரு நாளும் மாணவனுக்கு ஆசிரியர்கள் வழங்கும் வீட்டுப்பாடங்கள், மாணவனின் தனித்திறமைகள், பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றின் வீடியோ பதிவுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பள்ளியில் பராமரிக்கப்படும் மாணவர் திரள் பதிவேட்டிலும் இந்த க்யூ.ஆர். கோடு அமைப்பு பதிவிடப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களை பற்றி அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முயற்சியால் மாலை நேரங்களில் வீணாக பெற்றோரின் செல்போனை எடுத்து கேம்ஸ் விளையாடும் மாணவர்கள் தற்போது அன்றைக்கான வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவற்றை தாங்களாகவே தேடி அவற்றை ஆர்வமாக செய்து வருவது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே செல்லப்பெயர் சூட்டி மரம் வளர்த்தல், பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்து சத்துணவில் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுதல் என செயல்பாட்டை கொண்டுள்ள இந்த பள்ளி வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ள இந்த க்யூ.ஆர். கோடு அமைப்பு முறை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்று வருகிறது. 

Next Story