பாணாவரத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


பாணாவரத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 July 2018 11:00 PM GMT (Updated: 24 July 2018 7:33 PM GMT)

பாணாவரத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் கிராமத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தினமும் குடிநீருக்காக காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து திடீர் நகரை சேர்ந்த பொதுமக்கள் பாணாவரம் ஊராட்சி நிர்வாகத்திடமும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 8 மணிக்கு பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திடீர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோம். பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் குழாயை (பைப் லைன்) சரி செய்து கொடுத்தனர். கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக சீரான குடிநீர் வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து எங்கள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story