ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 27 July 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவிகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில் மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 62 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நேற்று 18-வது நாளாக நீடித்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் நீர்த்தேக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி வரை எதிரொலித்தது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்ததால் கடந்த 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதையடுத்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைத்தும், அதிகரித்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரத்து 465 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இதனிடையே நேற்று மதியம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரத்து 65 கனஅடியாக இருந்தது. இதன் காரணமாக நேற்று மதியம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.29 அடியாக இருந்தது.

அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என வருவாய்த்துறையினர் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story