மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 26 July 2018 10:30 PM GMT (Updated: 26 July 2018 9:16 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 942 பேருக்கு ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.

சிவகங்கை, 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 30 பேருக்கு கடனுதவி மானியம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு தொகையை அரசே ஏற்று மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 6 மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு மானிய காசோலை ரூ.36 ஆயிரத்து 250-ம் மற்றும் 298 மாற்றுத்திறனுள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10 லட்சத்து 35 ஆயிரமும், பார்வையற்ற நபர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பார்வையற்றோர் திருமண திட்டத்தின்கீழ் 3 தம்பதியினருக்கு திருமண உதவி தொகையாக ரூ.1 லட்சமும், உடல் மாற்றுத்திறனாளிகள் திருமண திட்டத்தின்கீழ் 10 தம்பதியினருக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், திருமண உதவித்தொகை, காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 தம்பதிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்றுத்திறனாளியை திருமணம் புரியும் மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 3 தம்பதியினருக்கு ரூ.75 ஆயிரமும், கடுமையாக இயலாமையுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 60 சதவீத மற்றும் அதற்கு மேல் மனவளர்ச்சி குன்றிய 2 ஆயிரத்து 175 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தின்கீழ் 308 பேருக்கும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 85 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கால், கை துண்டிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மற்றும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 60 பேருக்கு ரூ.35 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மனவளர்ச்சி குன்றிய 15 குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி உபகரணம் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் ரூ.4½ கோடியில் 2 ஆயிரத்து 942 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

Next Story