கிரிவலப்பாதையில் ‘ஹெலிகேம்’ பறந்ததால் பரபரப்பு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை


கிரிவலப்பாதையில் ‘ஹெலிகேம்’ பறந்ததால் பரபரப்பு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
x

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ‘ஹெலிகேம்’ பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரமணாஸ்ரமத்தின் அருகில் உள்ள மலையில் கந்தாஸ்ரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் அருகில் உள்ள மலையில் இருந்து சிலர் ஹெலிகேம் (பறக்கும் கேமரா) மூலம் நகரை படம் பிடிப்பதாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே திருவண்ணாமலை நகர்புறத்தில் ‘ஹெலிகேம்’ பயன்படுத்த கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது கந்தாஸ்ரமத்தை தாண்டி மலை பகுதியில் இருந்து ‘ஹெலிகேம்’ மூலம் நகரை படம் பிடித்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் ‘ஹெலிகேமை’ தரையிறக்கி அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சென்னை ஆவடி அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 22) என்பதும், மற்றொரு நபர் பெங்களூரு ஜரஹன்னி பகுதியை சேர்ந்த ஷேஷாங் (33) என்பதும் தெரியவந்தது. இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், செஞ்சியில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தின் மூலம் திருவண்ணாமலை நகரை படம் பிடிப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார், இதுபோன்று மலை பகுதிக்கு சென்று படம் பிடிப்பதாக இருந்தால் போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்று எச்சரித்து அவர்களை விடுவித்தனர். கிரிவலப்பாதையில் ‘ஹெலிகேம்’ பறந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story