புத்தக வாசிப்பு நிகழ்ச்சி கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற புத்தகவாசிப்பு நிகழ்ச்சியை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரியில் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி வாசிக்கிறது என்ற சிறப்பு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,620 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை 1 மணி நேரம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாடபுத்தகம் அல்லாத வேறு புத்தகங்களை ஒன்றாக அமர்ந்து வாசித்தனர். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சேர்ந்த 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.இதையொட்டி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தர்மபுரி வாசிக்கிறது நிகழ்ச்சியை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்து கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, புத்தக திருவிழாவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன், பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் ஆகியோர் புத்தகம் வாசித்தனர். அவர்களுடன் இணைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் புத்தகம் வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-
பொது அறிவை வளர்த்துக்கொள்ள பல்வேறு வகையான புத்தகங்களை நாட வேண்டும் என்பதே தர்மபுரி வாசிக்கிறது நிகழ்ச்சியின் நோக்கம். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கி கொள்ள பாடபுத்தகங்களை மட்டுமின்றி பல்வேறு வகையான தகவல்கள் அடங்கி உள்ள பிற புத்தகங்களையும் தொடர்ந்து வாசிக்க வேண்டும். கனவு கண்டால் எதையும் வெல்லலாம் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். இவ்வாறு கனவு காண்பதற்கான அடிப்படை வாசிப்பு மூலமே உருவாகும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நம் வாழ்நாள் வரை நிறுத்தாமல் தொடர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story