காற்று
ஐம்பெரும் பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாமல் நாம் உயிர் வாழவும் பூமி ஆரோக்கியமாக இருக்கவும் பங்காற்றி வருவது காற்று.
நம்மைச் சுற்றி எங்கெங்கும் காற்று விரவியிருக்கிறது. பல்வேறு வகைகளில் அது தாக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. காற்று, வெளியை அடைத்துக் கொள்கிறது. அதற்கு எடை உண்டு. அனைத்து திசைகளிலும் அழுத்தத்தையும் செலுத்துகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு கண்ணாடி புட்டியில் தண்ணீர் வைத்திருக்கிறோம் என்றால், அதிலுள்ள தண்ணீரை எவ்வளவு வெளியேற்றுகிறோமோ அவ்வளவு காற்று அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தக் காற்று உள்ளே சென்று அழுத்துவதால்தான், உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே வருகிறது. அறிவியல் ரீதியில் பூமியின் வளி மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்று என்பது நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (21%), நீராவி, தூசி, மற்ற வாயுக்கள் (1%) இணைந்தது.
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. நேர்மாறாக, தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன; பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெறவில்லை என்றாலோ, இதன் சமநிலை குலைந்தாலோ உலகம் உயிர்ப்புடன் இருப்பது சாத்தியமில்லை.
மனிதர்கள் உயிர்வாழ உணவு, தண்ணீர் போன்றவை தேவைதான் என்றாலும், இவை அனைத்தும் இருந்து ஓரிடத்தில் ஆக்சிஜன் (காற்று) இல்லையென்றால், மனிதன் வாழ முடியாது. உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிதர் சராசரியாக 7 லிட்டர் காற்றை சுவாசித்து, வெளியே விடுகிறார். நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நம்மில் பலரும் நம்புவது போல நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பெருமளவு காடுகளில் இருந்து வருவதில்லை. கடலில் இருந்தே வருகிறது. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் (ஓசோன் படலம்) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை மட்டுப்படுத்தவும் செய்கிறது.
Related Tags :
Next Story