ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்


ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்
x
தினத்தந்தி 30 July 2018 10:00 PM GMT (Updated: 30 July 2018 9:32 PM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டன்சத்திரம், 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையத்தில், சப்–இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கள்ளிமந்தையம்–தாராபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பு நின்ற மர்ம நபர்கள் 3 பேர் போலீசாரை பார்த்ததும் வேகமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

இதைப்பார்த்த போலீசார் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டினர். அதற்குள் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து, ஏ.டி.எம். மையத்துக்குள் சென்ற பார்த்தபோது அங்கே ஒரு கடப்பாறை கம்பி மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணத்தை திருட முயன்றது தெரியவந்தது. மேலும், யாராவது பிடிக்க முயன்றால் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி ஓடவும் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சரியான நேரத்துக்கு அங்கு வந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் கோபி கொடுத்த புகாரின்பேரில், கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story