குற்றாலம் சாரல் விழாவில் கொழு கொழு குழந்தை போட்டி கோலம் போடுவதற்கு பெண்கள் குவிந்தனர்


குற்றாலம் சாரல் விழாவில் கொழு கொழு குழந்தை போட்டி கோலம் போடுவதற்கு பெண்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 2 Aug 2018 10:00 PM GMT (Updated: 2 Aug 2018 7:00 PM GMT)

குற்றாலம் சாரல் விழாவில் கொழு கொழு குழந்தை போட்டியும், பெண்களுக்கான கோலப்போட்டியும் நடைபெற்றது.

தென்காசி,

குற்றாலம் சாரல் விழாவில் கொழு கொழு குழந்தை போட்டியும், பெண்களுக்கான கோலப்போட்டியும் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் குவிந்து விதவிதமான வண்ணங்கோலங்களை போட்டனர்.

கோலப்போட்டி

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவின் 6–வது நாளான நேற்று குற்றாலத்தில் உள்ள கலைவாணர் கலையரங்கத்தில் கொழு கொழு குழந்தை போட்டி, கோலப்போட்டி ஆகியவை நடைபெற்றன. போட்டிகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா தொடங்கி வைத்தார். இதில் திரளான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று விதவிதமான வண்ண கோலங்களை போட்டனர்.

கோலப்போட்டிக்கு குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி உதவி பேராசிரியைகள் செல்வி மற்றும் சாந்தி நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் தூத்துக்குடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாகம்பிரியாள் முதல் பரிசும், சொக்கம்பட்டி நேரு தெருவை சேர்ந்த கிருஷ்ணமணி 2–வது பரிசும், தென்காசி ஆயிரப்பேரி குலசேகரபேரி தெருவை சேர்ந்த காளியம்மாள் 3–வது பரிசும் பெற்றனர்.

கொழு கொழு குழந்தை போட்டி

கொழு கொழு குழந்தை போட்டிக்கு டாக்டர்கள் மோதி, முகம்மது இப்ராஹிம், திலகர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் பூலாங்குடியிருப்பு ரமேஷ் குழந்தை கவி அம்பேதி முதல் பரிசும், குற்றாலம் சுப்பிரமணியன் குழந்தை கதிர்வேல் 2–வது பரிசும், கடையநல்லூர் முருகேசன் குழந்தை கவின் சஞ்சய் 3–வது பரிசும் பெற்றனர்.


Next Story