மானாமதுரை அருகே கடும் வறட்சியால் ஊரை காலி செய்த மக்கள்


மானாமதுரை அருகே கடும் வறட்சியால் ஊரை காலி செய்த மக்கள்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 6:32 PM GMT)

வறட்சி, பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மக்கள் குடிப்பெயர்வு என்பது நிகழ்ந்து வருகிறது.

மானாமதுரை,

வறட்சி, பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மக்கள் குடிப்பெயர்வு என்பது நிகழ்ந்து வருகிறது. இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அருகே ஒரு கிராமமே கடும் வறட்சி காரணமாக காலியாகிவிட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வேலை தேடி வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் தற்போது அந்த கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மானாமதுரை அருகே சுமார் 10 கி.மீ. தூரத்தில் தாயமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சன்னதிபுதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட குமிழன் தாவு. இந்த கிராமத்தில் முந்தைய காலங்களில் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. வானம் பார்த்த பூமியான குமிழன்தாவு கிராமத்தில் நெல், கரும்பு மற்றும் சிறுதானிய பயிர் வகைகள் சாகுபடி செய்து வந்தனர். கடும் வறட்சியிலும் வற்றாத கிணறுகளை கொண்டதாக விளங்கிய இந்த கிராமத்தில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி மூலம் விவசாயம் பெரும் அளவு நடந்து வந்தது. ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் ஊருக்கு நடுவே சவேரியார் ஆலயமும் அமைந்துள்ளது. மேலும் தெருக்களுக்கு சிமெண்டு சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அந்த கிராமத்தில் நாளுக்குநாள் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்றது. வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை கிராமமக்களுக்கு ஏற்பட்டது. மேலும் விவசாயமும் தண்ணீரின்றி செய்யமுடியாமல் வேறு வழியின்றி பிழைப்பு தேடி அந்த கிராமத்தை சேர்ந்த பலரும் மதுரை, திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். தற்போது யாருமே வசிக்காத நிலையில் உள்ள அந்த கிராமத்தில் வீடுகள் அனைத்தும் சேதமடைந்து கரையான் புற்றுக்கு இரையாகி வருகின்றன.

இதுகுறித்து அந்த கிராமத்தில் வசித்து, தற்போது மானாமதுரையில் டீக்கடை வைத்திருக்கும் ஜோசப் என்ற முதியவர் கூறியதாவது:–

விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவந்த எங்கள் கிராமத்தில் மழை இல்லாததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வேறு வழியின்றி நாங்கள் ஊரை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டோம். தாயமங்கலம் திருவிழாவிற்கு முன்பு மாட்டுவண்டியில் பக்தர்கள் அதிக அளவு செல்வார்கள். அப்போது குமிழன்தாவு கிராமத்தில் வற்றாத கிணறு இருந்தது. கோவிலுக்கு செல்வோர் இங்கு இரவு தங்கி இளைப்பாறி காலையில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அப்படி செல்லும் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை நாங்கள் செய்து தருவோம். இந்தநிலையில் கடும் வறட்சி காரணமாக கிராமத்தை காலி செய்ய வேண்டிதாகிவிட்டது என்றார்.

வின்சென்ட் என்பவர் கூறுகையில், குமிழன்தாவு கிராமத்தில் சிறுதானிய பயிர்கள் அதிக அளவு விளையும். கடும் வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. பிழைப்பு தேடி வெளியூர் சென்றவர்கள் அங்கேயே நிரந்த குடியேறிவிட்டனர். கடைசியாக நாங்களும், மானாமதுரையில் குடியேறிவிட்டோம். ஆண்டிற்கு ஒருமுறை, அதாவது கிராமத்தில் உள்ள சவேரியார் ஆலய திருவிழாவிற்கு மட்டும் கிராம மக்கள் அனைவரும் வந்து செல்வார்கள் என்றார்.


Next Story