கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை - நாராயணசாமி ஆவேசம்


கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை - நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 6 Aug 2018 12:00 AM GMT (Updated: 5 Aug 2018 8:22 PM GMT)

கவர்னர் கிரண்பெடி போடும் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வழக்கம்போல் சமூக வலைதளத்தில், அதிகாரிகளுக்கு போடும் உத்தரவினை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கவர்னரின் அதிகாரம் தொடர்பாக தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பலமுறை நான் விதிமுறைகளை கூறியுள்ளேன். கவர்னர் புதுவையின் பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிடுவதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது.

ஆனால் அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடுவது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக போடும் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை. உத்தரவுபோடும் அதிகாரம் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குத்தான் உள்ளது.

தற்போது அதிகாரிகளை மிரட்டும் விதமாக கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். கவர்னர் எதை சொன்னாலும் அதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பவேண்டும். அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யவேண்டும். அதற்கான நிதியாதாரம் பட்ஜெட்டில் உள்ளதா? என்று பார்க்கவேண்டும். கவர்னர் செய்வது எல்லாம் ஓரிடத்துக்கு சென்று வீடியோ எடுத்து விளம்பரம் செய்வதுதான்.

புதுவை, உழவர்கரை நகராட்சி பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதிகளை அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் காரைக்கால் பகுதியும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை வர உள்ளது. தற்போது கழிவுநீர் வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன. அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் கவர்னர் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அவரால் தன்னிச்சையாக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. எந்த கோப்பாக இருந்தாலும் துறை செயலாளர், தலைமை செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்-அமைச்சர் வழியாகத்தான் செல்லும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை கவர்னர் முழுமையாக படிக்கவேண்டும்.

திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் நல்லம்பல் ஆற்றில் படுகை அணை கட்ட ரூ.8.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலை விரைவில் தொடங்கம் திருவேட்டக்குடி அரசாலாற்று பாலம் வரை சாலை அமைக்க ரூ.10.2 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருநள்ளார்-நெடுங்காடு-அன்னவாசல் சாலை ரூ.15.5 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. மத்திய விமான நிலைய ஆணையம் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி தர உள்ளது. இந்த நிதியைக்கொண்டு வில்லியனூர், ஏம்பலம், ஊசுடு, பாகூர், மணவெளி, அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், திருநள்ளார், திருப்பட்டினம், பள்ளூர், கனகலபேட்டா ஆகிய பகுதிகளில் சிறிய உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப கூறியுள்ளோம். ஏற்கனவே திருச்சி சிவா எம்.பி. இதுதொடர்பாக பேசி உள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி காலாப்பட்டு ஜோசப் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தமிழக பகுதியில் நடந்துள்ளது. அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நமது மாநில காவல்துறையினரும் திறமையாக செயல்பட்டு பல குற்றங்களை தடுத்துள்ளனர். சில குற்றங்கள் நடக்கும் முன்பாக அதற்காக திட்டமிட்டவர்களை கைது செய்துள்ளனர். விரைவில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரியினால் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுவையிலும் இத்தகைய தொழிற்சாலைகள் சில மூடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அந்த தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து பேசியுள்ளேன். அப்போது அவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரிகளை குறைக்க கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளேன்.

சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் வசூலாக ரூ.1.60 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரியும், டெல்லியும் விடுபட்டுள்ளது. அந்த நிதியை புதுச்சேரிக்கும் கொடுக்க கூறியுள்ளேன். அவ்வாறு கொடுத்தால் புதுச்சேரிக்கு ரூ.200 முதல் ரூ.250 கோடிவரை கிடைக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Next Story