ஜாமீனில் வந்தவர் மர்ம சாவு: உறவினர்கள் சாலை மறியல்


ஜாமீனில் வந்தவர் மர்ம சாவு: உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2018 9:30 PM GMT (Updated: 5 Aug 2018 8:25 PM GMT)

ஜாமீனில் வந்தவர் மர்ம சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.

பேரணாம்பட்டு, 



பேரணாம்பட்டு அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது 50). கடந்த ஜூலை 1-ந் தேதி கென்னடி தனது மகன் பிரதாப் (23) என்பவருடன் மாட்டுவண்டியில் ரெட்டிமாங்குப்பம் பாலாற்றில் மணல் கடத்திக்கொண்டு கிராமத்திற்குள் வேகமாக சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மணி மாறன் என்பவரின் மகள் சங்கவி (11) வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். திடீரென கென்னடி ஓட்டி சென்ற மாட்டு வண்டி சங்கவி மீது மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம்பூர் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து கென்னடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கென்னடி கடந்த 3-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவர் பக்கத்து கிராமமான மேல்கொத்தகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார் (30) என்பவர் வீட்டிற்கு சென்று அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் திடீரென கென்னடி தண்ணீர் கேட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கென்னடி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து கென்னடி உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கென்னடியின் மனைவி வரலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மணிமாறனின் மாமனார் வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் பாலாஜி, சிப்பாய் என்ற சுகுமார் உள்பட 11 பேர் மீது சந்தேகம் இருப்பதாக மேல்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கென்னடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை ரெட்டிமாங்குப்பம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது கென்னடியின் உறவினர்கள் 75 பேர் பிணத்தை வாங்க மறுத்தும், புகாரில் தெரிவித்த 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி மேல்பட்டி - ஆம்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ்பாபு, பாலச்சந்தர், தாசில்தார் ராஜேஷ், இன்ஸ்பெக்டர்கள் அப்பாசாமி, இருதயராஜ், மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் கென்னடியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கென்னடியின் உறவினர்கள் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக உள்ள அப்பாசாமி மீது நம்பிக்கை இல்லை, வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். அதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியாக குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் நியமிக்கப்பட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சுமார் 2½ மணி நேரத்திற்கு பிறகு இரவு 8.30 மணிக்கு பிணத்தை கிராமத்திற்குள் எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story