தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீர்


தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீர்
x
தினத்தந்தி 6 Aug 2018 3:15 AM IST (Updated: 6 Aug 2018 6:26 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், 


திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் அவற்றை திறந்த வெளியில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் பெரும்பான்மையான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்கள் வெளியேற்றுகின்றனர். அந்த ரசாயன கழிவு நீரானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

அவ்வாறாக காட்சியளிக்கும் அந்த ரசாயன கழிவுநீர் தண்ணீர்குளம் ஏரியில் கலக்கிறது. இதன் காரணமாக தண்ணீர்குளம் ஏரியில் தண்ணீரின் நிறம் மாறி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது.

இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும் அங்கு நிலத்தடி நீர் மாசுபடுவதால் தண்ணீரின் சுவையும் மாறுகிறது. இதனால் காக்களூர் மற்றும் தண்ணீர்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அந்த ரசாயனம் கலந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும் அந்த நீரில் பிளாஸ்டிக் பொருட்களும், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை வீசுவதாலும் அந்த ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே தண்ணீர்குளம் ஏரியில் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் கலந்த கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர்குளம் ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்காத வண்ணம் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story