குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு குடுகுடுப்பையை ஆட்டியவாறு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு


குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு குடுகுடுப்பையை ஆட்டியவாறு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு குடுகுடுப்பை ஆட்டிவாறு மனு கொடுக்க வந்த பொதுமக்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் வடிவேல் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பு மையம் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக செயல்படவில்லை. முறையான மின் விளக்குகளும் இல்லை. மேலும் காவல் பணியில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து சிலை பாதுகாப்பு மையத்தை புதுப் பொழிவுடன் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பராமரிக்கவும், மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் சிலைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி சிலைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மக்கள் தங்களின் பாரம்பரிய தொழிலாளான குடுகுடுப்பை ஆட்டியவாறு, தங்களது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு வீட்டுவரி ரசீது இல்லாததால மின்இணைப்பு பெற முடியவில்லை. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி போன்ற எந்தஒரு அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் எங்கள் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கவும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும், எங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கவும் மற்றும் எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் கலெக்டர் வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆவுடையார்கோவில் பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர் கொடுத்த மனுவில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பறையத்தூர் ஏரியில் உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள நிலத்தை மீட்க வேண்டும் என கூறியிருந்தார்.

கறம்பக்குடி பல்லவராயன்பத்தை பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், பல்லவராயன்பத்தை ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தியடிப்பட்டிக்கு செல்லும் பிரிவுசாலை தாய் திட்டத்தின் மூலம் போடப்பட்டது. இந்த சாலை போடப்பட்ட 3-வது நாளிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகிறது. எனவே கலெக்டர் இந்த சாலையை பார்வையிட்டு இந்த சாலை 5 ஆண்டுகள் வரை தாங்கும் வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story