மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள் + "||" + Flood fish in the pool near Thoothukudi

தூத்துக்குடி அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

தூத்துக்குடி அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
தூத்துக்குடி அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சாயர்புரம், தூத்துக்குடி அருகே பேய்க்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தின் மூலம் பல ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குளத்தில் 10 மடைகள் உள்ளன. இதில் 9-வது மடைப் பகுதியில் பேய்க்குளத்தில் இருந்து சேர்வைக்காரன் மடம் செல்லும் ரோடு அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் உள்ள பாலத்தில் நேற்று அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் ரசாயன கழிவுகளை கொட்டி உள்ளனர்.

இந்த ரசாயன கழிவு பாலம் வழியாக வழிந்து சென்று பேய்க்குளத்தில் இருந்த தண்ணீரில் கலந்து உள்ளது. இதனால் அந்த குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அதே போன்று அந்த குளத்தில் இருந்து வெளியே செல்லும் வாய்க்காலிலும் மீன்கள் செத்து கிடந்தன.

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், தாசில்தார்கள் சந்திரன், சிவகாமிசுந்தரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி என்ஜினீயர் ஜோசன் அங்கு வந்தார். அவர் குளத்தில் கொட்டப்பட்டது அமிலமா? அல்லது வேறு ஏதேனும் ரசாயன கழிவா? என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குளத்தில் இருந்த தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.