அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பதாக அறிவிப்பு கர்நாடகத்தில் இன்று அரசு பஸ்கள் இயங்குமா?


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பதாக அறிவிப்பு கர்நாடகத்தில் இன்று அரசு பஸ்கள் இயங்குமா?
x
தினத்தந்தி 6 Aug 2018 10:51 PM GMT (Updated: 6 Aug 2018 10:51 PM GMT)

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பஸ்கள் இயங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணைத்தலைவர் பிரகாஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை வாபஸ் பெற வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி நாங்கள் நாளை (இன்று) பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சுதந்திர பூங்காவுக்கு வருவோம். பிறகு கவர்னரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம்.

இந்த மசோதா போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு எதிரானது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்காது. உரிமம் வழங்குதல், வரி வசூலித்தல் போன்ற அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு சென்றுவிடும். இதனால் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளும் பறிபோகும்.

வாகன உதிரிபாக வியாபாரிகள், சாலையோரம் உள்ள சிறிய அளவிலான வாகன பழுது நீக்கும் பணிமனைகளின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் வேலையை இழப்பார்கள். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 26 ஆயிரம் பஸ்கள் இருக்கின்றன. அவற்றில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தங்களின் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

இதுபற்றி கர்நாடக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ரேவப்பா கூறுகையில், “கர்நாடகத்தில் நாளை (இன்று) அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியை புறக்கணிக்கிறார்கள். எங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன“ என்றார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு பஸ்கள் இயங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பணியை புறக்கணித்தால் அத்தகைய தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று வழக்கம்போல் அரசு பஸ்கள் ஓடும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ..சி. அமைப்பு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது.

Next Story