திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 6:48 PM GMT)

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து மண்டல பொது செயலாளர் கே.ரவி தலைமை வகித்தார்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சுங்கச்சாவடி வசூலை கைவிட கோரியும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை அழிக்க நினைப்பதை கைவிட கோரியும், இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை கைவிட கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story