மினிபஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி; 51 பேர் காயம்


மினிபஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி; 51 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Aug 2018 3:15 AM IST (Updated: 8 Aug 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மினிபஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 51 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்-அனுமந்தராயன்கோட்டை இடையே பொன்மாந்துறை, கொட்டப்பட்டி வழியாக மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து ஒரு மினிபஸ் அனுமந்தராயன்கோட்டைக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது.

காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அதிக அளவில் பஸ்சில் ஏறினர். மேலும் பஸ்சில் இடம் இல்லாமல், சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தனர். இதனால் அந்த பஸ்சில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பஸ்சை தருமத்துப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 24) என்பவர் ஓட்டினார்.

அந்த பஸ் காலை 8 மணி அளவில் கொட்டப்பட்டி அருகேயுள்ள ஆலங்குளம் கரை வழியாக வந்தது. குளத்தின் மறுகால் பகுதியில் வந்த போது மினிபஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த இன்னாசி மகன் மார்க்ராஜா (19) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு, பஸ்சில் சென்ற போது விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்மாந்துறையை சேர்ந்த தமிழ்செல்வன் (14), பிரின்ஸ்மேத்யு (18), சைமன்பிரகாஷ் (17), அபிநயா (10), சுவேதா (17), ராபின் (17), திவ்யா (18), சிவஜனனி (13), ஜோயல் (8), ஜென்ஸ்ராஜ் (11), கவுசல்யா (17), குட்டியபட்டி ஜவகர் (18), பிரயதர்ஷினி (15), மீனாட்சி (14), பொன்மாந்துறை புதுப்பட்டி மைதிலி (15), பவதாரணி (14), சின்னம்மாள் (45), மார்க்ரீட்டா (65), சவுந்தர் (20) உள்பட 51 பேர் காயம் அடைந்தனர்.

இதில் 38 பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆவர். இதையடுத்து காயம் அடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிரின்ஸ்மேத்யு என்ற மாணவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது மினிபஸ் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்சை ஓட்டியதாக, பயணிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story